சின்னத்துரை அண்ணாவின் பேரனும் சிவராசாவின் மூத்த மகனுமாகிய அரவிந்த் மீண்டும் சாதனை படைத்து எமது ஊருக்கும் இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளான். அந்த மாபெரும் வீரன் மேலும் பல சாதனைகள் படைக்க எமது வாழ்த்துக்கள்.  

ரக்வண்டோ டென்மார்க் மேஸ்டரானார் தமிழ் இளைஞர்..

December 2, 2014
as
தன்னிலும் உயரமான வீரரை வீழ்த்தி சாதனை படைத்த தமிழ் வீரன்..
டென்மார்க்கில் நாடளாவிய ரக்வண்டோ சாம்பியன் தேர்வுப் போட்டியில் கிறீன்ஸ்ரெல் நகரத்தில் வாழும் தமிழ் இளைஞரான அரவிந்த் சிவராஜா டென்மார்க் மேஸ்டராக தேர்வானார்.
கடந்த 29.11.2014 அன்று ஊதின்ச அரேனாவில் இந்தப் போட்டி நடைபெற்றது.
சென்ற ஆண்டும் இதே போட்டியில் அகில டென்மார்க் சாம்பியனாக தங்கப்பதக்கம் வென்று தமிழினத்திற்கு பெருமை தேடிக் கொடுத்தவர் அரவிந்த் சிவராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரக்வண்டோ போட்டியில் 51 கிலோ எடைக்குக் குறைந்தோருக்கான போட்டி தணல் தெறிக்கும் போட்டியாகும், மிகுந்த பயிற்சி அதைவிட முக்கியம் மதி நுட்பம் நுண்ணிய தாக்குதல் அறிவு ஆகியன இதற்கு மிக அவசியமாகும்.
ஆரம்பத்தில் இருந்து வெற்றிகளை பெற்றுவந்த அரவிந்த்திற்கு இறுதிப் போட்டிதான் மிகவும் சவாலாக அமைந்தது, எதிராக நின்ற ரக்வண்டோ வீரர் இவரைவிட மிகமிக உயரமான ஒருவராக இருந்தார்.
போட்டியில் தலையில் அடிக்கும்போதுதான் அதிகமான புள்ளிகள் கிடைக்கும், இருப்பினும் தன் முன்னால் நிற்பவரை நிமிர்ந்து பார்த்து, ஆஜானுபாகுவான அவரைப் பார்த்து, சிறிதளவும் தளர்ந்துவிடாது, காலம், இடம், எதிரியின் பலம், உயரம், மதியூகம் போன்றவற்றை கணப்பொழுதில் சீர்தூக்கி பலத்த மோதல்களுக்குப் பின்னர் வெற்றி வாகை சூடினார்.
அனல் பறந்த இறுதிப்போட்டியைப் பார்த்தக் கொண்டிருக்க கண்களில் வியர்த்துக் கெட்டியது போன்ற உணர்வாக இருந்தது.
மகன் பெற்ற வெற்றியை பரபரப்போடு பார்த்துக் கொண்டிருந்த அவருடைய தந்தையான சிவராஜா ஆனந்தக் கண்ணீர் மல்க அவரைக் கட்டித் தழுவினார்.
தனது பிள்ளை வெற்றி பெற வேண்டும், சாதனையாளனாக மலர வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் பட்ட வேதனையின் வலிகள் மறந்து ஆனந்தக் கண்ணீராக மாறியது.
பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்கும் பெற்றோர் ஒவ்வொருவரிடமும் காணப்படும் பதட்டமும் பரிதவிப்பும், வெற்றிச் சிரிப்பும் அவரிடமும் காணப்பட்டது.
செல்வன் அரவிந்த் சிவராஜா பெற்ற வெற்றி இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கும், தாயகத்தில் உள்ள தமிழருக்கும், தாம் பிறந்த கதிரிப்பாய்க்கும் பெருமை என்று சிரித்தபடி கூறினார்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய் – வள்ளுவர்.
சில காட்சிகள்